வியாழன், 18 செப்டம்பர், 2008

சுஜாதா என்கிற ரங்கராஜன்

தமிழர்களுக்கு தமிழ் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைஉருவாக்கியவர் கல்கி. படிக்கிற்வர்களுக்கெல்லாம் நாமும் எழுத்வேண்டும் என்கிற ஆர்வத்தை உருவாக்கியவர் சுஜாதா

கதையைப் படிக்கும்போதே அதற்குள்ளே ஓர் ஓரமாக நாமும் இருந்து கதையுடன் சென்றுகொண்டே அதை அனுபவிப்பதைப் போன்ற்தொரு உண்ர்வை ஏற்படுத்தியவர்.
கதை சொல்லும் விதத்திலேயே ஒரு சுவாரஸ்ய அனுபவத்தைக் கொண்டு வந்தவர்.

அவருடைய 'கரையெல்லாம் செண்பகப்பூ'தான் நான் படித்த முதல் தொடர்கதை. சிறுகதை, தொடர்கதைகளை ரசிக்க எனக்கு ஒரு அடிப்படை பாடமாக இருந்தது அது. அந்தக் கதையின் ஒவ்வொரு கட்டமும் இன்னமும் மறக்க முடியாதது. "அந்தப் பாஸஞ்சர் திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது" - இந்த முதல் வரியிலேயே அந்த ஊரைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த நீலச்சட்டைக்காரன், வெள்ளி, மருதமுத்து, தங்கராசு, பெரியாத்தா, பெரியதனக்கார அய்யாத்துரை, அந்த பாழடைந்த ஜமீன் அரண்மனை......அனைத்தும் கண்முன்னே நிழலாடுவதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்து நடையும், கதாபாத்திரங்களின் உருவாக்கமும்தான்.

பட்டணத்தில் பிறந்து வளர்ந்த, வெஸ்டெர்ன் கிளாஸிகல் படித்த, நாட்டுப்பாடல் பற்றி ஆராயும் ஆர்வம் கொண்ட பார்ப்பன இளைஞன் கல்யாணராமனில் ஆரம்பித்து, தடாலடி 'மேனாமினுக்கி' ரக பட்டணத்து பெண்ணாக சினேகலதா, ஜமீன் மாளிகையில் புதையல், அதைக்கைப்பற்றும் முயற்சி என 'த்ரில்ல'ராக ஒரு பக்கமும், கிராமத்து வெள்ளி மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்புடன் (ஆனால் கட்டுப்பாடுடன்) கல்யாணராமனும், வெள்ளியின் முறைமாமனாகவும் சினேகலதா வந்தவுடன் தடுமாற்றமடையும் ஒரு பாமரனாகவும் மருதமுத்து, பென்சில் மீசை இன்ஸ்பெக்டர்,இளைஞனான கலெக்டர்..... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர் எழுத்தின் விசேஷமே, அந்த வர்ணனைகளில் படிக்கும்போது நமக்கு மிகவும் பரிச்சயமான இடங்களும், அன்றாடம் பார்த்த/பார்க்கும் மனிதர்களின் குணாதிசயங்களும் இடம்பெறுவதுதான்.

அண்ணா மேம்பாலத்தின் அடிப்பகுதியில் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து தேனாம்பேட்டைக்குச் செல்லும் வழியில், ஜி.என். செட்டி சாலைக்குத் திரும்பும் ஒரு பாதை வரும். மிக மிக உயரம் குறைந்த பாலத்தின் அடிப்பகுதி அது. ஓரு கணேஷ் வசந்த் கதையில் ஆரம்ப அத்தியாயத்தில் அவர்கள் இருவரும் புதிதாக வாங்கிய 'க்வாலிஸ்' வண்டி அந்த இடத்தில் சிக்கிக் கொண்டு விடுவதாக சுஜாதா எழுதி விட்டார். அதை நம்ப முடியாமல் நானும் என் நண்பனும் அங்கேயே சென்று சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.

(......இன்னும் தொடரும்)

புதன், 3 செப்டம்பர், 2008

ஆஹா ஆரம்பித்துவிட்டேன்

என் இனிய உலகத் தமிழ் மக்களே!

உங்கள் குரு இன்று முதல் தமிழ் வலைப்பூவை ஆரம்பித்துவிட்டேன்.

வினாயக சதுர்த்தியன்று 'சென்டிமென்டா'க ஆரம்பித்து இருக்கிறேன். உங்கள் அனைவரது பார்வையும் விமரிசனங்களும் என்னை அரவணைக்கட்டும்.