புதன், 24 அக்டோபர், 2012

மொழியும் நாமும்



என் மொழி தமிழ் வாழ்க! இன்ன பிற மொழிகளும் வாழ்க! 

முதலாவதாக மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம். எத்தனையாவது முறையாக சொன்னாலும் அது ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான். உடல் செய்கைகளால் உடனடித் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அத்தகவல்களை அனுபவங்களாக மாற்றம் செய்துகொள்ள முடியவில்லை. “Cognitive” என்று ஆங்கிலத்திலே சொல்வது போல தகவல்களை புரிந்துணர்ந்து நினைவுகளில் சேமித்து வைத்து பகுத்தறிந்து பயன்படுத்த ஒரு ஊடகம் மனிதனுக்கு தேவைப்பட்டது. எனவே மொழி உருவானது.

அதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியாக அது செம்மைப் படுத்தப் பட்டது. இலக்கணங்கள் உருவாயின. மனித குல வரலாறு பதிவு செய்யப்படலாயிற்று. பண்பாட்டு கலாசார சின்னமாக மொழி கருதப்படலாயிற்று.

அங்கிருந்து மொழியின் அடையாளங்கள் மாறலாயின. மனிதன் தன் தனிப்பட்ட சமூகத்தின் அடையாளமாக மொழியை பார்க்கத் துவங்கினான். Ego என்று சொல்லப்படும், உலகின் பல்வேறு பிரச்னைகளின் மூலகாரணமான ஆணவம் மொழியின் மூலமாகவும் வெளிப்படலாயிற்று. மொழி மெல்ல மெல்ல ஒரு சமுதாய அந்தஸ்தின் அடையாளமாக மாற ஆரம்பித்தது. மேல் தட்டு மக்கள், கீழ்தட்டு மக்களின் அடையாளங்கள் மொழியால் பிரிக்கப் பட்டன. (தேவ பாஷை, நீச பாஷை, Royal English, cockney)
என் மொழி எனக்கு மிக மிக உசத்தியானதுதான். கண்டிப்பாக. ஏனென்றால், எனக்கு வாழ்க்கை ஆரம்பித்ததே அதில்தான். நான் பாசம், நேசம், தேசம் எல்லாவற்றையும் அறிந்துகொண்டது அதன் மூலம்தான். ஆனால் அந்த மொழியை ஒரு அடையாளமாக்கிவிட வேண்டாம் என்பது தான் என் வேண்டுகோள். அப்படிச் செய்யும்போது அதன் “பொது”த்துவம் போய் விடுகிறதோ என்கிற பயம் எனக்கு வருகிறது. என்னை, என் சமூகத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக அசிங்கப்படுத்த நினைக்கிறவர்கள் என் மொழியை கேவலப்படுத்தி மகிழ்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவன் என்கிற காரணத்தால் ஒருவன் தாக்கப்படுகிறான். ஒரு மொழியில் எழுதப்பட்ட எல்லா அறிவிப்புகள், குறியீடுகள், நூல்கள், இலக்கியங்கள், வரலாற்றுப் பதிவுகள் எல்லாமே அழிக்கப் படுகின்றன.
சுஜாதாவின் ஒரு கதையிலே ஒரு ஈழத்தமிழ் எழுத்தாளர் சொல்லுவார் ஒரு தமிழ் நூலகம் சிங்களர்களால் எரிக்கப் பட்டதைப் பற்றி. (நான் அரசியல் பேசவில்லை. இது ஒரு உதாரணம்தான்) இங்கே மொழிச் சுவடுகளை அழிப்பது ஒரு இனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பழி வாங்கும் ஒரு ஸாடிஸத் திருப்தியை அளித்திருப்பது வருந்தத் தக்கது.
எனவே, சற்றே மாறிப் பார்த்தாலென்ன? மொழியை ஒரு ஊடகமாக மற்றும் கருதிப் பார்ப்போம். பண்பாடு, கலச்சாரம் எல்லாம் நம் அணுகுமுறை, ஒழுக்கம், தன்மை சம்பந்தப்பட்ட வெளியீடுகள். ஆனால் மொழி என்பது இவற்றைப் பற்றியெல்லாம் வெளி உலகிற்குத் தெரியப் படுத்த உதவும் ஒரு கருவி. தமிழன் வாழ்வின் சிறப்பைப் பற்றி எந்த மொழியிலும் தெரிவிக்கலாம். அதை முதலில் தமிழர்கள் பதியும் போது தங்கள் மொழியில் பதிந்தார்கள் அவ்வளவுதான்.
அப்போது தமிழில் உணர்வை வெளியிட்டால்தான் தமிழர் கலாச்சாரம் என்ற எண்ணம் மறையும். தமிழில் உணர்வை வெளியுடுவதாலேயே அதை எதிர்க்கும் போக்கும் மாறும்.
உணர்வு ரீதியாக மொழியை அணுகுவதை விட, தேவை ரீதியாக அணுக வைப்போம். மொழியை வாழ்க்கையின் இயல்பான ஒரு விஷயமாக ஆக்குவோம். அப்போது ஏற்றுக்கொள்ளும் தன்மை வளரும். அறைகுறை ஆங்கிலத்தில் பெருமை பேசுவது குறையும்.
Monday morning வந்தாச்சேன்னு  feel பண்ணிக்கிட்டு இருக்காதீங்க; வேற என்ன பண்றது? Somehow cheer up பண்ணிகிட்டு எழுந்து offiiceக்கு readyயாகுங்க” 
--என்கிற மாதிரியான FM அலைவரிசை தொல்லைகள் எல்லாம் ஒழியும். இது என்ன கொடுமை? ஓய்வு நாள் முடிந்து வேளை நாளில் சுறுசுறுப்பாக இருக்கவேண்டியவனை இன்னும் வெறுப்பேற்றிக்கொண்டு? இதுதான் கலாச்சாரச் சீரழிவு. இதை ஆங்கிலத்தில் செய்தால் என்ன தமிழில் செய்தால் என்ன?
ஆங்கிலம் தவறல்ல. நமக்கு எட்டுத் திக்கும் செல்ல உதவுகிற ஒரு நல்ல மொழி தான் அது. தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலேயன் நமக்குக் கற்றுத் தந்ததால், இன்று உலகம் முழுதும் பரவி வென்று வருகிறோம். ஆனால், ஆங்கிலம் பேசுபவர் தான் பெரிய ஆள் என்று “குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்” உருவானதுதான் இங்கே தவறு.
நல்ல திறமையுள்ள ஒரு சில நண்பர்கள் என்னிடம் வந்து “என்ன ஸார் பண்றது? எனக்கு communication skills பத்தாது” என்று புலம்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்லுகின்ற அந்த skill வெறும் ஆங்கிலம் பேசமுடியாதது மட்டும் அல்ல. ஆங்கிலம் பேச முடியாததால் நான் உலகில் வேறு எதற்குமே லாயக்கில்லாமல் போய்விட்டேன் என்கிற உணர்வு. தமிழ் பேசுவது அந்தஸ்து ரீதியாக மட்டம் என்கிற தாழ்வு மனப்பான்மை.
இதற்கு முதல் காரணம் இவ்விரண்டு மொழிகளையும் (இன்ன பிற மொழிகளயும்) சமுதாய, கலாச்சார அடையாளங்களோடு இணைத்துக் கொண்டதுதானோ என்று சில சமயம் தோன்றுகிறது. ஆங்கிலத்தை ஒரு மொழியாக அல்லாமல் ஒரு பாடமாக கற்று வந்திருக்கிறோம். உருப்போட்டு இலக்கணங்களை மனனம் செய்து இன்னொருவர் மொழியாகவே ஆங்கிலத்தைப் பார்த்து எப்படி கற்க முடியும்? எனவே மேற்கொண்டு முன்னேற நினைக்கும்போது ஒரு மொழியாக தகவல் பரிமாறிக்கொள்ளமுடியாமல் தவிக்கிறோம்.
இன்னோர் புறம் தமிழாக்குவோம் என்று “வன்பொருள் தானியங்கி உதிரியகம்” என்றெல்லாம் பெயர் வைத்து பயமுறுத்தும் கொடுமை. தமிழாக்க வேண்டியதுதான். தவறில்லை. ஆனால் அதற்கென்று ஒரு அமைப்பு, ஒரு வரையறையே இல்லை. இந்த தமிழாக்கம் சரியா தவறா என்றெல்லாம் யாரும் ஆராய்வதில்லை. காலத்துக்கேற்றார்போல் மொழியும் வளர வேண்டும். நிகழ்கால நடைமுறை வாழ்க்கையை சேர்ந்து இயைந்து இருக்க வேண்டும்.
பாரதி எழுதிய தமிழிலே ஸ்த்ரீகள், புருஷர்கள், ஸர்வகலாசாலை, காரியதரிசி என்றெல்லாம் வருகிறது. இப்பொழுது அதையெல்லாம் நாம் பயன்படுத்துவதில்லை. மாற்றிவிட்டோம். இதைப் போல் சில வருடங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை ஏற்படுத்தி விட்டோமானால் ஆங்கிலம் போல் நடைமுறைக்கு ஒத்ததாக புதுப்பித்துக் கொண்டே போகலாம்.
தமிழில் மட்டுமே பயின்றவர்களுக்கும் பிறமொழிக் கலைச்சொற்கள் பழகும். நுட்பங்கள் கைவசப்படும். மொழி அந்தஸ்து பேதங்கள் குறையும். FullஆகவேTamil இல் speakகுவது அதிகரிக்கும்.
வாருங்கள் முதலில் நம் மொழியை வானத்துத் தேவதையாய் வணங்கியதுபோதும். வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வோம். தகவல்களை, உணர்வுகளை, அறிவை, ஆற்றலை, ஞானத்தை, நுட்பத்தை எல்லாத் திக்கிலிருந்தும் கொணர்ந்து நமக்குள் பரிமாறிக்கொள்ள பயன் படுத்துவோம். நமக்குள்ளே நம் மொழியிலேயே பேசிக்கொள்வதை எளிதாக்குவோம், இனிதாக்குவோம்.  அதை ஒரு  இனத்தின் அடையாளமாக அல்ல; இந்த இகத்தின் அடையாளமாக மாற்றுவோம்.
கருத்துக்களை வரவேற்கிறேன்

குருபார்வையில் மேலும் பல....
·         முதல் காதல்
·         சர்ரியலிசம்
·         சகல கலா வல்லவனாய் மாறுவது எப்படி?
·        கவிதைகள்
·         ........
என்னுடைய படிவங்கள்
எல்லாமும் படியுங்கள்
உற்சாகம் அடையுங்கள்
உளக்கருத்து வடியுங்கள்


2 கருத்துகள்:

SRI RAM சொன்னது…

A very frank article expressing and analysing what a language actually is :)Sad that the purpose of a language has moved away from what it actually should be. A really nice read.and as u mentioned in the article, a language has the ability and scope to reinvent and equip itself time to time. people should not stop that by the name of protecting a language's identity :) super read...

indusarav சொன்னது…

A Neat Note on Language! Worth Reading Sir!