திங்கள், 29 அக்டோபர், 2012

முதல் காதல்

(என்னுடைய பிந்தைய பதிவை படித்து நேரிலும் தொலைபேசியிலும் வலைத்தளத்திலும் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. சற்றே "கன"மான (heavyயான)தாகக்  கருதப்பட்ட அந்தப் பதிவுக்குப் பின். இப்போது என்னுடைய கவிதை ஒன்றை கீழே வெளியிட்டுள்ளேன். படித்து ரசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.)

முன்பொரு நாள்....

பொன்னிற வெயிலின் மாலை
பொழுதினைப் போக்கவெண்ணி
கண்ணிரு பக்கம் சுழற்றி
காலாறச் சென்ற பொழுது

சுந்தர வடிவந்தாங்கி
சுடரொளி முகமுந்தாங்கி
அந்தரப் பறவை போல
அழகிய வளைவுந்தாங்கி

சென்னிற உடலுந்தாங்கிŽ
செங்கதிர் ஒளியுந்தாங்கிŽ
என்னிரு கண்ணில் பட்டாய்
என்னுளந்தன்னை தொட்டாய்

தன்னிரு €கையாலுன்னை
தழுவிட ஆசைப்பட்டேன்
தன்னிலை உணர்ந்ததாலே
தயங்கியே நின்று விட்டேன்

கண்ணிமை மூடவில்லை
கால்களோ நகரவில்லை
என்னையே மறந்து உந்தன்
எழிலினில் மயங்கி விட்டேன்

சிந்திய சில்லரை போல
சிரிக்கையில் நானும் உந்தன்
மந்திர மொழியைக் கேட்டு
மதியினை இழந்து விட்டேன்

"பொன்னவிர் மேனியாளை
பொறுத்துத்தான் அடைய வேண்டும்
என்னரும் காதற்கிளியை
எதிர்காலம் சேர்க்க வேண்டும்"

எண்ணங்கள் பலவும் மனதில்
ஏதேதோ கதைகள் சொல்ல
இல்லந்தான் திரும்பி விட்டேன்
இதயத்தை உன்னில் விட்டு

படிப்பினை முடித்து, பின்னர்
பட்டங்கள் பெற்று, ஆலைப்
'படிப்பினை' பெற்றிடவேண்டி
பணியினில் சேர்ந்தபோதும்

பலப்பல மாதம் கழித்து
பணி நிலை பெற்ற போதும்
பாவியென் உள்ளம் தினமும்
பறந்திடும் உந்தன் நினைவில்

இறுதியாய் ஒருநாள் நானும்
இன்பத்தில் நீந்திவிட்டேன்
இதயத்தைத் தொட்ட உன்னை
இரு€கையில் ஏந்தி விட்டேன்

அதுமுதல் மகிழ்வே ஆஹா
அளித்தனை என் YAMAHA!

கருத்துகள் இல்லை: