வெள்ளி, 9 நவம்பர், 2012

என்ன சத்தம்........

நேற்று இரவு வெளியில் ஒரு நண்பரைச்  சந்தித்து விட்டு சற்று தாமதமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். சுமார் 10 மணி இருக்கும். எங்கள் தெருவுக்கு முந்தைய சாலையில் காரைத் திருப்பும்போது வானொலியில்  அன்று கமலஹாசனின் பிறந்த நாலை முன்னிட்டு புன்னகை மன்னன் படத்திலிருந்து "என்ன சத்தம் இந்த நேரம்.." பாடலை ஒலி பரப்பியது. அவ்வளவுதான், நான் அங்கேயே சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு முழு பாடலையும் கேட்க ஆரம்பித்தேன்.எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு சில விஷயங்களில் இது ஒன்று.

அந்த இன்ஜின் சத்தம், ஏ .சி. சத்தம் கூட தொல்லை தரக்கூடாது என அணைத்துவிட்டு பாட்டை கேட்டேன்.

ஆஹா... என்ன அற்புத அனுபவம். இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட அந்த பாடலில் என்ன கனம், என்ன சுவை?

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் ஒரு பாடல் அது. 10 நிமிடங்களில் முடியப் போகிற ஒரு காதலை அவசர அவசரமாக படம் பார்ப்பவர்களுக்கு விளக்கியாகவேண்டிய ஒரு கட்டாயம் இயக்குனருக்கு. பாலச்சந்தராயிற்றே..அந்தப் பொறுப்பை இசை ஞானியிடம் விட்டார். 

ஒரே ஒரு பாடல். முடித்து கொடுத்தார் ராஜா.
Mission Accomplished.

எந்தப் பீடிகையும் இல்லாமல் ஒரு சின்ன கிடாரின் வருடலோடு உடனே பல்லவி.

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா?

இப்போது ஒரு மிதக்கும் கிடார் சுரங்கள். அதோடு கூட  

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா?
அடடா..- (என்ன சத்தம்)
 
(அந்த "அடடா" வில் S.P.B. ஒரு உருகு உருகியிருப்பார். அது தனி கதை. )

இப்படி உடனடியாக ஆரம்பித்த வேகத்தை கேட்டு  மனது  அமைதியாகிவிடும். என்ன சத்தம் என்று தேடுவதைப் போல 

இப்போது ஒரு 4 அக்ஷரத்திற்கு (1..2..3..4) ஒரு நிசப்தம்...........

இளையராஜா சொல்லுவார் நிசப்தம்  கூட ஒரு இசைதான் என்று.. அதை இந்த இடத்தில் நான் அனுபவித்திருக்கிறேன். நமது மனமே எந்த எதிர்ப்பார்ப்புகளும்  இன்றி ஒரு ஒரு வினாடி அடங்கிவிடும்.
 
பிறகு மெல்லியதாய் வருடுகின்ற ஒரு குழல்(flute). அதுவும் கூட ரகசியமாய் நம் காதுகளிலே இசைப்பது போல இருக்கும். அதைத் தொடர்ந்து  லேசான ட்ரம்பெட் சுரங்களோடு "தனன தனன.." என்று துடித்து சரணத்திற்கு வழிவிடும்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே!
கண்களில் ஏந்த கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே!
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே!
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு!
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு!
ஆரிரரோ! இவர் யார் எவரோ?

பதில் சொல்வார் யாரோ?  (என்ன சத்தம்)
 
மீண்டும் அதே அமைதி. இப்போது மனமும் அந்த அமைதிக்குத் தயாராகிவிட்டது. இப்போது மிக மிக அருமையான கிடார் composition. 
லேசாய் ஊஞ்சலாடும் ஒரு இசைக்கோர்வை. கூடவே ட்ரம்பெட் மெதுவாய் சேர்ந்து அடுத்த சரணத்தை துவக்கிவிடும். அற்புத அனுபவம்.
 
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ!
தன் நிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ!
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ!
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ!
மங்கை வள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்!
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்!
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்!
இளம் காதல் மான்கள்  (என்ன சத்தம்)
 
மெலிதான ஆர்ப்பாட்டமில்லாத ரிதம். ஒரே தாள வரிசை. எந்த மாயாஜாலங்களும் இல்லாத தெளிந்த நீரோடை போன்ற ஒரு melody.
பாடல் வரிகள் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருப்பதாய் நான் கருதவில்லை. 
 
"சிலுவைகள் இல்லை சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
 
போன்றோ அல்லது 
 
"கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ, காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ"
 
போன்றோ நின்று நிலைத்து நினைவில் நிற்கும் வரிகளாக எதுவும் இங்கே காணப்படவில்லை.
 
காரணம் நமக்கே அந்த காதலர்கள் 10 நிமிடத்திற்கு மேல்  பரிச்சயமில்லை.  அவர்கள் காதலின் வலிமையோ வலியோ ஒன்றும் நமக்கு தெரியாது. ஆனால் இதெயெல்லாம் தெரிந்து தான் பாலசந்தர் இந்த சிச்சுவேஷனை இளையராஜா கையில் கொடுத்துவிட்டார் போலிருக்கிறது.

வெறும் இசையிலேயே அந்த காதலர்களை அமரத்துவம் அடையச் செய்து விட்டார் ராஜா  என்றுதான் சொல்லவேண்டும்.

பாட்டு முடிந்துவிட்டது. ஆனால் அந்த அனுபவம் முடியவேயில்லை. 
ஒவ்வொரு சுரமும் என்னைச் சுற்றி வந்து "போதுமா போதுமா" என்று கேட்பது போலவே இருந்தது.
 
அந்த interludeகளுக்கு இடையே வரும் அமைதி மனதை என்னவோ செய்துகொண்டிருந்தது. வெளியே நகரமும் அந்த அமைதியைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அதற்கும் இந்தப் பாடல் பிடித்திருந்ததோ?


கருத்துகள் இல்லை: