வெள்ளி, 16 நவம்பர், 2012

முடிந்தது தீபாவளி


தீபாவளி முடிந்து 3/4 நாட்களாகிவிட்டன. ஒரு பட்டாசைப் போல நொடியில் வெடித்து முடிந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது தீபாவளி.

ஆம். அன்று காலை விடிந்தது. மளமளவென்று விரைந்தது. முடிந்தும் விட்டது.  விடியலில் எழுந்து எண்ணெய் தேய்த்து, புதிய உடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, டிவி பார்த்து முடிப்பதற்குள்ளாக இரவு வந்து முடிந்து அடுத்த நாள் துவங்கிவிட்டது. ஒரு க்ஷண ம்தான் இருந்தது போலிருக்கிறதா தீபாவளி?

ஆம் இது புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இப்படித்தான். அப்போது என்னதான் கொண்டாட்டம் தீபாவளியில்? ஏன் இப்படி மாய்ந்து போகிறோம் தீபாவளி தீபாவளி என்று?

உண்மையில் உற்சாகம் தீபாவளி அன்று அல்ல - அதற்குத் தயாராவதில்தான் இருக்கிறது. 

3/4 மாதங்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் பதிவு செய்கிறோமே, அன்றே துவங்கிவிடுகிறது தீபாவளி உற்சாகம்.

"உனக்கு கிடைத்ததா, எனக்கு கிடைத்து விட்டது"
"பரவாயில்லை தத்கல்லில் பார்த்துக்கொள்ளலாம்; அல்லது ஏதாவது ஸ்பெஷல் விடுவார்கள்"

சந்தோஷம், ஏக்கம், எதிர்பார்ப்பு, சாதனை எல்லாம் அந்த நொடியில் இருந்து தொடங்கிவிடுகிறது.

பிறகு துணி வாங்குவது. ஒரு சிலர் லீவ் எல்லாம் போட்டு குடும்பத்தோடு கடைக்குச் சென்று துணி வாங்குவதை ஒரு விழா போல கொண்டாடுவது உண்டு. காஞ்சிபுரம் போய் பட்டு புடவை வாங்கி வருவது உண்டு. ("இருந்தாலும் சுஜாவுக்கு மட்டும் எப்படி மெட்ராசிலேயே அவ்வளவு அகல பார்டர் கிடைச்சது? நாம்தான் தண்டத்துக்கு ஊர் சுத்தி வந்திருக்கோமோ?")
சுடிதார் துணி வாங்கி டெய்லர் சீக்கிரம் குடுப்பாரா என்று காத்திருந்து...

ஆண்கள்  விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை. பலர் துணி வங்கி தைத்தாலும், பெரும்பாலும் ரெடிமேட், ஜீன்ஸ் என்று போய்விடுகின்றனர். ஒரு நாள் முன்னாடி வாங்கினால் கூட  போதும். (நான் இந்த முறை முந்தின நாள் இரவு கடை மூடும் நேரத்தில் தான் வாங்கினேன். "சார் க்ளோசிங் டைம் சார் " என்று பின்னாலேயே துரத்தி வந்தார் கடை சிப்பந்தி. பாவம் அவருக்கும் அடுத்த நாள் தீபாவளிதானே) 

இருந்தாலும் சின்ன வயதிலெல்லாம் ஒரு 10-15 நாட்களுக்கு முன்னாடியே தைத்து வைத்து விடுவார்கள். தினம் தினம் பீரோவைத் திறந்து அதைப் பார்த்து பார்த்து சந்தோஷப் பட்டு....அடடா! அது ஒரு தனி சுகம்!(எனக்கெல்லாம் தீபாவளிக்கு உள்ளாடை முதற்கொண்டு புதிதாய் இருக்க வேண்டும்) உறவினர்கள் நண்பர்களுக்கு புது டிரஸ்ஸை காட்டும் சாக்கில் பல முறை போட்டுப் பார்த்து விடுவோம். இருந்தாலும் தீபாவளி அன்று போடும்போது ஒரு அலாதி இன்பம்தான். 

அப்புறம் இருக்கவே இருக்கிறது பட்டாசுகள். நானெல்லாம் சிறுவயதில் ஒரு தீவிரவாதியைப் போல் பட்டாசு வெடிப்பேன். ஒரு வாரமாக கடைகளையெல்லாம் நோட்டம் விட்டு மனதிற்குள் லிஸ்ட் போட்டு, 3/4 நாட்களுக்கு முன்பே போய் கடையில் (கூட்டம் கம்மியாயிருக்கும்) பட்டாசு வாங்கி விடுவோம். அது நமத்துப் போகாமலிருக்க தினமும் வெயிலில் காய வைக்க வேண்டும் . அப்போது அதை ஆசை ஆசையாய் தொட்டு தடவிப் பார்த்து (அன்றைக்கே வெடிக்கவும் மனசு வராது) மீண்டும் மூட்டை கட்டி வைத்துவிடுவோம். எதை எதை எப்படியெல்லாம் வெடிக்கப் போகிறோம் என்று திட்டமிட ஆரம்பித்து விடுவோம். சில லோக்கல் வெடிகளை மட்டும் முன்பிருந்தே வெடிக்க ஆரம்பித்து விடுவோம். 

குறிப்பாக இந்த ரயில்வே தண்டவாளத்தின் ஸ்லீப்பர் கட்டைகளை தாங்கிப் பிடிப்பதற்கு ஒரு சிறிய இரும்பு உலக்கை போன்ற வஸ்து இருக்கும் (இப்போதெல்லாம் போல்ட் செய்து விடுகிறார்கள்) அதை வர்க் ஷாப்பில் கொடுத்து\ அதன் தலையில் ஒரு குழியை ட்ரில் செய்து தரக் சொல்லி வோடுவோம். அதற்கு "டும் குழாய்" என்று பெயர். 

பின்னர் கடையில் கந்தகம் (sulphur) வாங்கி அதை கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் குழியில் நிரப்பி, அதன் மேலே' ஒரு ஆப்பு அல்லது போல்ட்டை வைத்து ஓங்கி அடித்தால் "டமார்" என்ற சத்தத்துடன் அது வெடிக்கும். பெரிய அளவில் புகை (கந்தக வாசனையுடன்) கிளம்பும். அரை மணி நேரம் விளையாடினால் உடம்பெல்லாம் புகை நாற்றமடிக்கும். அதே கந்தகத்தை ஒரு சிகரெட் பெட்டியில் உள்ள அலுமினியம் காகிதத்தில் மடித்து வைத்து வெடித்தால் அந்த எஃபெக்டே தனி. ஏனென்று யாராவது கெமிஸ்ட்ரி படித்தவர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 

தீபாவளி நாள் வரும் வரை இதுதான் எங்கள் பட்டாசு உலகம். ஆனாலும் அந்த நிஜப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்துக்காகக் காத்திருப்பதில் ஒரு சுகம். 

(அதை விட சுகம் தீபாவளி அன்று வெடித்து முடித்த பின்பு தெருவில் இறைந்து கிடக்கும் வெடிக்காத பட்டசுகளை எல்லாம் பொறுக்கி, ஒரு காகிதத்தில் கொட்டி, அதற்கு நெருப்பு வைத்து புஸ்ஸ்ஸ்...)

பிறகு வீட்டில் நடக்கும் தின்பண்ட ஏற்பாடுகள். சில சமயம் வீட்டிலேயே செய்வார்கள். அல்லது 2/3 குடும்பங்கள் சேர்ந்து ஒரு சமையற்காரரை அழைத்து பொதுவாய் செய்து கொள்வார்கள். அதுவும் 3/4 நாட்களுக்கு முன்னதாகவே தயாராகிவிடும். தினம் போகிற வருகிற சாக்கில்....("ஒண்ணுமில்ல மூடி  லூசாயிருந்த்து சரியாக மூடினேன்" "கரகரப்பு சரியாயிருக்குறதா என்று பார்த்தேன்"  etc.,etc.,)
இருந்தாலும் தீபாவளி வரப்போவதை அது நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு சுகம். 

பின்னர் ஊரிலிருந்து மாமா மற்றும்  உறவினர்கள் வருவதாய்க் கடிதம் போட்டிருப்பார்கள். பேச்சிலர் மாமாக்கள் எல்லாம் தீபாவளிக்கு முன்தினம் இரவுதான் ஊரிலிருந்து வருவார்கள். அவர்தான் ஆட்டம் பாம், நாக் அவுட் பாம்  எல்லாம் கொண்டு வந்து வெடிப்பார். அதைப் பற்றிய கற்பனைகளில் சில நாட்கள் மிதந்து கொண்டிருப்போம். 

இப்படி பார்த்து பார்த்து தயாராவதில்தான் நிஜமான தீபாவளி  சந்தோஷம் இருப்பதாகத தோன்றுகிறது, 

திடீரென வந்தே விடும் தீபாவளி. 


அது க்ளைமாக்ஸ். 

அந்த நேரத்தில், கணத்தில் 'நாம் இவ்வளவு நாள் எதிர்பார்த்திருந்த தீபாவளி என்கிற தருணத்தில் இப்போது இருக்கிறோம்' என்ற நினைப்பே பல சமயம் நமக்கு இருப்பதில்லை/பரபரபரவென்று அன்றைய தினம் ஓடி முடிந்து விடுகிறது.

போதாக்குறைக்கு   டிவி நிகழ்ச்சிகள் வேறு வந்துவிடுவதால் தீபாவளியின் contextடே  மாறிவிட்டதோ எனத் தோன்றுகிறது. 

ஆனாலும் அந்த தீபாவளியின் எதிர்பார்ப்பு....காத்திருத்தல்.......அது தனி உற்சாகம் தான். 
நம் மனம் கவர்ந்தவளிடம் போய் நம் காதலைச் சொல்லுவதற்கு முன் வரை இருக்குமே ஒருவித anxiety....மனதுக்குள்ளே ஒரு பட்டாம்பூச்சி! அந்த மாதிரி ஒரு த்ரில் தான் அந்த தீபாவளி எதிர்பார்ப்பு!

நம் வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய சின்ன சின்ன சந்தோஷங்களில் ஒன்று இந்த தீபாவளி  ஆயத்தம்  என்று கூடச் சொல்லலாம்.

எத்தனையோ பண்டிகைகள் நம் வாழ்வில் வந்தாலும் தீபாவளி ஒரு தனி சுவாரசியம் தான் சந்தோஷம்தான்.

அந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கட்டும். 

(அடுத்த வருடத்திற்கு இப்போதே) தீபாவளி நல்  வாழ்த்துக்கள்!



கருத்துகள் இல்லை: